2ஜி தீர்ப்பு எதிரொலி.. தமிழகத்தில் எதிர்பாராத அதிரடி கூட்டணி மாற்றங்களுக்கு வாய்ப்பு?

avatar

சென்னை: 2ஜி வழக்கில் வெளியாகியுள்ள தீர்ப்பு காரணமாக, தமிழகத்தில் கூட்டணிகள் மாறும் வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை திமுகவை ஒரு ஊழல் கட்சி என்று டெல்லியிலுள்ள சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்ட 'எலைட் லாபி' அழைத்து வந்தது. 2ஜி வழக்கை அதற்கு பெரும் ஆதாரமாக அவர்கள் காட்டி வந்தனர். பாஜக தொண்டர்கள் மத்தியில் இந்த வாதம் மிகவும் ஆழமாக ஊடுருவியிருந்தது. இதையடுத்து திமுகவை தீண்டத்தகாத கட்சியாகவே நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு பாஜக தலைமை தள்ளப்பட்டது.

ஆனால் இப்போது நிலைமை வேறு. 2ஜி வழக்கில் திமுகவை சேர்ந்த கனிமொழியும், ஆ.ராசாவும் மட்டுமின்றி குற்றச்சாட்டுக்கு ஆளான அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் திமுக மீதான ஊழல் கறை துடைக்கப்பட்டுவிட்டது. இனிமேல் பாஜக-திமுக கூட்டணிக்கு தடை இல்லை என்கிறார்கள். தேவைப்பட்டால் இந்த கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. 2ஜி தீர்ப்பு வெளியாகும் முன்பே, கோபாலபுரத்தில் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது ஸ்டாலின், கனிமொழி ஆகியோரும் மோடியுடன் அன்னியோனியம் காட்டினர்.

இதையடுத்து காங்கிரஸ் வட்டாரத்தில் திமுகவை கோபித்துக் கொண்டனர். பண மதிப்பிழப்புக்கு எதிராக திமுக நடத்திய ஆர்ப்பாட்டங்களில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்காமல் இருந்தது இதனால்தான் எனக் கூறப்பட்டது. எனவே பாஜக, திமுக இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கும் வாய்ப்புள்ளதாம். தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே அவர்களுடன் கூட்டணி வைத்தால் மொத்தமாக குடிமுழுகிவிடும் என்ற அச்சம் பாஜகவுக்கு உள்ளது. மறுபக்கம், ஈழத்தில் நடைபெற்ற தமிழின படுகொலைகளுக்கு பிறகு காங்கிரஸ் மீது தமிழ் ஆர்வல மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்களோடு கூட்டணி வைத்திருந்தபோதுதான் 2ஜி, ஈழப்பிரச்சினை என வரலாறு மறக்காத பல கறைகளை திமுக சுமக்க வேண்டியதாயிற்று. எனவே திமுகவும்-பாஜகவும் கூட்டணி அமைத்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்கிறார்கள்.

திமுக, பாஜக கூட்டணிக்கு ஒருவேளை ஸ்டாலின் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், கனிமொழியும், அழகிரியும் அந்த முடிவுக்கு எதிராகவே நிற்பார்கள் என்கிறார்கள் பாஜக தலைமைக்கு நெருக்கமானவர்கள். திமுகவுக்குள் கலகம் ஏற்படுவதை தடுக்க பாஜகவுடன் நெருக்கம் காட்டவே திமுக தலைமையும் விரும்பும் என அடித்துச் சொல்கிறார்கள்.

RECOMMENDED CONTENTS

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES