பச்சையாகச் சொல்லுகிறேன்… -சாரு நிவேதிதா

avatar

கொஞ்ச நாட்களாக இந்த விஷயத்தைப் பற்றி நான் சாருஆன்லைனில் எழுதாமல் இருந்தேன். இனிமேல் இதை எழுதுவதற்கான சூழ்நிலை அமையாது என்றே நினைத்திருந்தேன். ஆனால் நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா என்ன? திடீரென்று ஒருநாள் ஒரு பதிவுத் தபால் வந்தது. 1000 பக்கங்கள் கொண்ட பெரிய பார்ஸல். இப்படி பார்ஸல் வருவது சகஜம்தான் என்பதால் சாவகாசமாக வாங்கிப் பிரித்தால் கோர்ட் சம்மன். அதுவும் பெங்களூர் கோர்ட்டில். ஒரு சாமியார் என் மீது மான நட்ட வழக்குப் போட்டிருந்தார். இப்போது பெங்களூருக்கும் சென்னைக்குமாக அலைந்து கொண்டிருக்கிறேன். ஒரு தெரிந்த வக்கீலைத் தொடர்பு கொண்டேன். மிகுந்த தெய்வ பக்தி கொண்டவர். பணத்தின் மீது ஆசையே இல்லாதவர். முதல் தவணையாக 10,000 ரூ. கொடுங்கள் போதும் என்றார். ஹார்ட் அட்டாக்கே வந்து விட்டது எனக்கு. பிறகு இன்னொருவரிடம் சென்று அவரோடு கோர்ட்டுக்குப் போனேன். அந்த வக்கீல் ஃபீஸ் 3000 ரூ. ரசீதும் கிடையாது. எதற்குச் சொல்கிறேன் என்றால், இப்படித்தான் என் வாழ்க்கையில் திடீர் திடீரென்று என்னென்னவோ நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஒன்று, அந்தக் கோர்ட் அனுபவங்கள் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தாலும் எனக்குக் கிடைத்திருக்காது. A Kafkaesque experience… இன்னும் பல முறை போக வேண்டும்.

சரி,நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். எனக்குப் பணம் வேண்டும். உண்டியல் குலுக்குகிறேன். உதவ விரும்புகின்றவர்கள் மட்டும் மேலே தொடர்ந்து படிக்கலாம். மேலும், என்னைப் பிச்சைக்காரன் அவன் இவன் என்று இதை வைத்துத் திட்ட விரும்புபவர்களும் மேலே தொடர்ந்து படிக்கலாம். மற்றவர்கள் தயவுசெய்து படிக்க வேண்டாம். ஏன் இப்படி எழுதுகிறேன் என்றால், பல நண்பர்கள் – ஆம், பல நண்பர்கள் – இப்படி நான் பணம் கேட்டு எழுதுவதைப் படித்து விட்டு மிகவும் அருவருப்பு அடைகிறார்கள். அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பஸ்ஸில் அமர்ந்திருக்கும் போது பெண் குழந்தைகள் வந்து அட்டை வைக்குமே, அதைப் போல் நினைக்கிறார்கள். அல்லது, காரில் போகும் போது கண்ணாடிக் கதவைத் தட்டி பிச்சை எடுக்கும் போக்கிரிகளைப் போல் என்னைப் பற்றி நினைக்கிறார்கள்.

திரும்பவும் சொல்கிறேன். அப்படி அட்டை போடும் பெண்களோ, உங்கள் கார் கதவைத் தட்டி பிச்சை எடுக்கும் போக்கிரிகளோ உங்களுக்கு எதையும் தருவதில்லை. உங்களிடமிருந்து திருடுவதற்குத் துணிச்சல் இல்லாததால் அவர்கள் அப்படிப் பிச்சை எடுக்கிறார்கள். ஒருவகையில் அவர்கள் திருடர்கள். ஏனென்றால், அவர்கள் உங்களுக்கு எதுவும் தராமல் உங்களிடமிருந்து பணம் கேட்கிறார்கள். ஆனால், உங்கள் எதிரில் ஒரு மணி நேரம் பாடி விட்டு ஒரு ஆள் உங்களிடம் தட்டை நீட்டுகிறான் என்றால் அது பிச்சை அல்ல. உங்களிடம் சன்மானம் கேட்கிறான்; கூலி கேட்கிறான் என்று பொருள். மேற்கத்திய நாடுகளில் சாலை ஓரங்களில் அப்படி பல கலைஞர்களைப் பார்த்திருக்கிறேன்.

நான் பண உதவி கேட்டு எழுதியதைப் படித்து விட்டு ஒரு அன்பர் பேருந்துகளில் அட்டை போடும் சிறுமியின் ஞாபகம் வந்ததாக எழுதியிருந்தார். தன்னுடைய குருவை பிச்சைக்காரனாகப் பார்க்கும் மூடத்தனத்தை என்னவென்று சொல்வது? நான் கடந்த 35 ஆண்டுகளில் 40 புத்தகங்களை தமிழ்ச் சமூகத்துக்குக் கொடுத்திருக்கிறேன். இதில் ஆறு நாவல்களை எடுத்து விட்டாலும் மீதி 34 புத்தகங்கள் ஞான சுரங்கங்கள்; பொக்கிஷங்கள். சர்வதேச இலக்கியம், இசை, சினிமா என்று பல்வேறு துறைகளில் பல ஆண்டுகள் செலவிட்டு, தேடித் தேடிக் கண்டடைந்த ஞானத்தின் வெளிப்பாடுகள். ஒரே சொல்லில் சொல்வதானால் WISDOM. அது wisdom என்று தெரிந்து கொள்ளாதவர்கள் இதை மேற்கொண்டு படிக்காதீர்கள். காது இருப்பவனால் மட்டுமே சங்கீதத்தை ரசிக்க முடியும். அறிவும் நுண்ணுணர்வும் கொஞ்சமாவது இருப்பவர்களால்தான் நான் தருவது ஞானம் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

இப்படி, 35 ஆண்டுகளில் 40 புத்தகங்களை அளித்த என்னால் இந்த சமூகத்தில் கொஞ்சமாவது கௌரவமாக வாழ முடிகிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. நான்கே ஆண்டுகள் எஞ்ஜினிரியங் படித்த ஒரு இளைஞனால் காரில் செல்ல முடிகிறது; வீடு கட்ட முடிகிறது; உலகம் பூராவும் சுற்ற முடிகிறது. ஆனால் 35 ஆண்டுகளாக ஒரு சமூகத்துக்கு ஞானத்தை வழங்கிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளன் ஒரு வேளை சாப்பாட்டுக்கே சிங்கி அடிக்க வேண்டியிருக்கிறது. இதுதான் தமிழ்ச் சமூகம். கூர்க் என்ற ஊருக்குப் போய் தங்கி 75,000 ரூ. செலவு செய்து ஒரு கட்டுரை எழுதினால் அந்தப் பத்திரிகை 1000 ரூ. சன்மானம் அனுப்புகிறது. ஆனால் மற்றவர்கள் ஒரு சமோசா தின்றால் கூட அதற்கு ரசீது வாங்கி அலுவலகத்தில் reimbursement வாங்கிக் கொள்கிறார்கள். பெட்ரோலுக்கு, பீட்ஸாவுக்கு, மருத்துவச் செலவுக்கு, குழந்தைகளின் படிப்புக்கு, ரயில்/விமான செலவுக்கு என்று எல்லாவற்றுக்கும் reimbursement. பீட்ஸா சாப்பிட்டு விட்டு ரசீதை வாங்கி பத்திரமாக பர்ஸுக்குள் வைத்த என் நண்பரிடம் “ஆணுறைகளுக்கும் reimbursement உண்டா?” என்று கிண்டலாகக் கேட்டேன்.

கட்டுரைக்கும் கதைக்கும் 1000 ரூ. சன்மானம் அனுப்பும் பத்திரிகையைப் படிப்பவர்கள் தமிழ்நாட்டில் ஒரு கோடி. மற்ற பத்திரிகைகளில் 750 ரூ, 500 ரூ. இப்படி இதைப் பச்சையாக எழுதும் ஒரே ஆள் தமிழ்நாட்டில் நான் ஒருவன் தான். வேறு எந்த எழுத்தாளரும் எழுத மாட்டார். பயம். பத்திரிகைகளில் black list செய்து விட்டால், பிழைப்பு ஓடாதே?

சரி, 1000 ரூபாயை வைத்துக் கொண்டு எப்படி வாழ்க்கையை ஓட்டுவது? அதற்காகத்தான் சினிமா இயக்குனர்களுக்குக் கால் கழுவி விடுவது. (நாகரீகமாக ‘கால்’ என்று எழுதியிருக்கிறேன்). நான் இருக்கும் நிலையில் நானும் என் சகாக்களைப் போல் இயக்குனர்களுக்குக் கழுவி விடப் போகலாமா என்று கூட சமயங்களில் நினைக்கும் அளவுக்கு demoralize ஆகி விடுகிறேன். ஆனால் இதுவரை அப்படி சமரசம் செய்து வாழ்ந்ததில்லை என்பதால் இந்த 59 வயதில் அப்படி வாழ சங்கோஜமாக இருக்கிறது. எந்தப் பெண்ணாவது 59 வயதில் செக்ஸ் ஒர்க்கராகப் போக முடியுமா, சொல்லுங்கள்?

நேற்று லாயிட்ஸ் ரோட்டில் உள்ள triana உணவகத்துக்கு பிரியாணி சாப்பிட நண்பர்களுடன் சென்றிருந்தேன். ரம்ஜான் மாதத்தில் மட்டும் ஒரே ஒரு நாள் மட்டன் பிரியாணி சாப்பிடுவது என் வழக்கம். மற்றபடி கொலஸ்ட்ராலை நினைத்து பயந்து red meat-ஐத் தொடுவதே இல்லை. ட்ரையானாவில் ஹலீம் வேறு கிடைப்பதாகத் தெரிந்ததால் அங்கே செல்வதில் ஊக்கமாக இருந்தேன். எங்கள் ஊரில் நோம்புக் கஞ்சியை நோம்புக் கஞ்சி என்று தான் சொல்வார்கள். ஹலீம் என்ற வார்த்தையை நான் கேள்விப் பட்டதில்லை. ஹலீம் என்றால் ஏதோ ஒருவகை பிரியாணி என்று நினைத்துக் கொண்டு ட்ரையானா ஆளிடம் போனில் “ஹலீம் பிரியாணி கிடைக்குமா?” என்று கேட்டேன். ஹலீம் கிடைக்கும் என்றார். என்னோடு வந்த மற்ற மூவரும் பிராமணர்கள். காலையில்தான் ஆவணி அவிட்டம்(!). பேரரிடம் நான் ஹலீம் பிரியாணி என்று சொல்ல, ஒரு நண்பர் “ஹலீம் என்றால் நோம்புக் கஞ்சி” என்றார். (ராஜ ராஜேந்திரன் என் வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுத்த ஹலீம் பிரமாதமாக இருந்தது; நன்றி ராஜ ராஜேந்திரன்). ஆனால் இன்றிலிருந்து இரண்டு கடும் பத்தியத்தில் செல்ல இருப்பதால் நோம்புக் கஞ்சியும் வேண்டாம் என்று வைத்திருக்கிறேன்.

நால்வரும் சாப்பிட்ட பிறகு பில் வந்தது. நான்கு பேருக்கு 1000 ரூ. கம்மிதான். அதை யார் கொடுப்பது என்று இரண்டு நண்பர்களுக்குள் விவாதம். இரண்டு பேருமே நான் தான் கொடுப்பேன் என்று பிடிவாதம் பிடிக்க, மூன்றாவது நண்பர் கொடுத்து விட்டார். போகட்டும். அப்போது எனக்குள் நடந்த மனப் போராட்டத்தை இங்கே தருகிறேன். லாயிட்ஸ் ரோடு செல்ல என்னிடம் பணம் இல்லை. போக வர, ஆட்டோவுக்கு 200 ரூ வேண்டும். என்னிடம் ஒரு பைசா கூட இல்லை. பஸ்ஸில் போவதை நிறுத்தி 10 ஆண்டுகள் ஆகிறது. காலையில் நடந்ததைச் சொன்னால்தான் மாலையில் நடந்ததைப் புரிந்து கொள்ள முடியும். காலையில் இட்லி தோசை சாப்பிடுவதில்லை. அதனால் ஸாண்ட்விச்சும் காஃபியும் சாப்பிட்டதில் கையில் இருந்த காசு காலி. நாகேஸ்வர ராவ் பார்க்கில் நடந்து விட்டு வீட்டுக்கும் நடந்துதான் வந்தேன். வீடு பார்க்கிலிருந்து ஒன்றரை அல்லது இரண்டு கிமீ இருக்கும். ஸாண்ட்விச்சுக்கும் காப்பிக்குமே காலையில் கையில் காசு இல்லை. அவந்திகாவின் பர்ஸிலிருந்துதான் லவட்டினேன். இருட்டில் பர்ஸைத் தேடும் போது ஒரு திருடனைப் போலவே உணர்ந்தேன். லைட் போட்டால் அவந்திகா எழுந்து கொள்வாள். பர்ஸை எங்கே வைத்திருக்கிறாள் என்று தேடுவதற்குள் பிராணன் போய் விட்டது. பர்ஸில் ஒரு நூறு ரூபாய் நோட்டும் இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகளும் மட்டுமே இருந்ததால் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை வைத்து விட்டு மற்ற இரண்டு நோட்டுகளை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். பொதுவாக, பார்க்குக்குப் போக வர ஆட்டோதான் என்றாலும் நேற்று காசு இல்லாததால் நடந்தே பார்க் போனேன். நடந்து விட்டு பக்கத்தில் உள்ள ஜக்கி வாசுதேவின் பக்தர் ஒருவர் வைத்திருக்கும் யோகமுத்ரா உணவகத்தில் சாண்ட்விச்சும் காப்பியும் சாப்பிட்டேன். 140 ரூ காலி. பத்து ரூபாயை டிப்ஸ் வைத்து விட்டு வீட்டுக்கு நடையைக் கட்டினேன்.

வீட்டுக்கு வந்ததும் அவந்திகா “என் பர்ஸிலிருந்து 150 ரூபாயை எடுத்தாயா?” என்று கேட்டாள். ஆமாம் என்றேன். ”நான் ரொம்பத் தேடினேன்; ஏன் என்னிடம் சொல்லவில்லை?” என்றாள். ”தூங்கிக் கொண்டிருக்கும் உன்னை எழுப்பி எப்படிச் சொல்வது?” என்று எரிச்சலுடன் பதில் சொன்னேன்.

மாலையில் எப்படி ட்ரையானாவுக்குச் செல்வது? ஆட்டோவுக்கே 200 ரூ. வேண்டுமே? வங்கியில் பத்து ரூபாய்தான் இருந்தது. நண்பருக்கு போன் போட்டு “ட்ரையானாவுக்குப் போகும் வழியில் என் வீட்டுப் பக்கம் வருவதற்கு வாய்ப்பு உண்டா?” என்று கேட்டேன். “வாய்ப்பே இல்லை; இந்த வழி வேறு, அந்த வழி வேறு” என்று சொல்லி விட்டார். பிறகு வேறு வழியில்லாமல் அவந்திகா பர்ஸிலேயே மேலும் ஒரு நூறு ரூபாயைத் திருடிக் கொண்டு கிளம்பினேன். போகும் போது ஆட்டோவில் போய் விடலாம். திரும்புவதற்கு நண்பர்களிடமே ஆட்டோவுக்குக் கேட்டுக் கொள்ளலாம் என்று திட்டம். ஆனால் இடையில் சந்தித்த ஒரு நண்பர் அவர் பைக்கிலேயே கொண்டு போய் ட்ரையானாவில் விட்டார். 100 ரூ மிச்சம் என்று நினைத்துக் கொண்டது மனம். அதோடு, திரும்பிப் போக பிரச்சினை இல்லை என்று ஆசுவாசமாகவும் இருந்தது. சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவந்திகாவிடமிருந்து போன்.

வரும் போது எனக்கு ஆப்பிள் வாங்கி வர முடியுமா?

ஓ, நிச்சயமாக.

காசு இருக்கிறதா?

இருக்கிறது.

கையில் இருக்கும் நூறு ரூபாய் தைரியத்தில் எதிரே இருக்கும் பழமுதிர் நிலையத்துக்குக் கிளம்பினேன். எங்கே கிளம்புகிறீர்கள் என்று கேட்ட நண்பரிடம் விஷயத்தைச் சொன்னதும், அவரே போய் ஆப்பிள் வாங்கி வந்தார். அப்பாடா, திரும்பிப் போவதற்கான பணம் தப்பியது என்று மீண்டும் ஆசுவாசம் அடைந்தேன். ஆனால் திரும்பும்போது காரிலேயே வீடு வரை கொண்டு வந்து விட்டார்கள் நண்பர்கள்.

இன்று காலை வழக்கம் போல் இருட்டில் அவந்திகாவின் பர்ஸைத் தேடினேன். கிடைக்கவில்லை. ஒளித்து வைத்து விட்டாள் போலிருக்கிறது. கையில் இருக்கும் நூறு ரூபாயை வைத்துக் கொண்டு எப்படிப் போவது, இன்றைக்கு வாக்கிங் போக வேண்டாம் என்று மெயில் பெட்டியைத் திறந்தேன். நண்பர் முத்துக்கிருஷ்ணன் என் ஐசிஐசிஐ கணக்குக்கு வழக்கப்படி 500 ரூ. அனுப்பி இருந்தார். ஆஹா, இன்று நல்ல நாள் என்று நினைத்துக் கொண்டு ஐசிஐசிஐ அட்டையை கர்வத்துடன் எடுத்துக் கொண்டு வாக்கிங் கிளம்பினேன்.

எனக்கு செலவு கம்மி. ஒரு தோழி போனுக்கு டாப் அப் செய்கிறார். முன்பெல்லாம் சொல்லாமலேயே தானாகவே செய்வார். இப்போது அவ்வப்போது அவரை நினைவூட்ட வேண்டியிருக்கிறது. இன்னொரு நண்பர் என் வெளிநாட்டுப் பயணத்துக்கு வேண்டிய தொகையை அனுப்பிக் கொண்டிருக்கிறார். அதில் நான் கை வைப்பதில்லை.

கோபி கிருஷ்ணனுக்கு இப்படியெல்லாம் நண்பர்கள் இல்லாமல்தான் இளம் வயதில் செத்துப் போனார். எனக்குத் தெரிந்த ஒரு கவிஞர். அவருக்குக் கவிதையைத் தவிர வேறு வேலை எதுவும் தெரியாது. அவருடைய இரண்டு புதல்வர்களையும் அவருடைய நண்பர் ஒருவர்தான் படிக்க வைத்தார். இப்போது அந்தப் பையன்கள் இருவரும் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். இப்படித்தான் நானும் நண்பர்களைச் சார்ந்து இருக்க வேண்டியிருக்கிறது.

உங்கள் புத்தகங்களை 300 ரூ, 400 ரூ. என்று காசு கொடுத்துத்தானே வாங்குகிறோம்? ஓசியிலா படிக்கிறோம்? என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சிறிய கணக்கு சொல்கிறேன். 10 கோடி ரூபாயில் ஒரு சினிமா எடுக்கிறீர்கள். அதை ஒரு கோடி பேர் பார்த்தால் ஒரு டிக்கட்டின் விலை பத்து ரூபாய். அதே படத்தை பத்தாயிரம் பேர் மட்டுமே பார்த்தால் ஒரு டிக்கட்டின் விலை எவ்வளவு? பத்தாயிரம் ரூபாய். அப்போதுதான் நட்டமில்லாமல் இருக்கும். ஆக, இதே விஷயத்தை என் புத்தகங்களுக்குக் கொண்டு வந்தால், என் புத்தகங்களை 2000 பேர் வாங்கினால் ஒரு புத்தகத்தின் விலையை 3000 ரூ. என்று வைக்க வேண்டும். குறைந்த பட்சம் 30,000 பேராவது வாங்கினால்தான் 300 ரூ. என்று வைக்கலாம். உதாரணமாக, ஒட்டிஞ்ஜர் (Ulrike Ottinger) இயக்கிய taiga என்ற ஒன்பது மணி நேர ஆவணப்படத்தின் டிவிடியை வாங்கிப் பார்க்கலாம் என்று நினைத்தேன். விலை கேட்டால் 290 யூரோ என்றார்கள். கிட்டத்தட்ட 20,000 ரூபாய். காரணம், ஒட்டிஞ்ஜர் மங்கோலியாவின் taigaவில் ஓர் ஆண்டு தங்கியிருந்து எடுத்த படம் அது. பல லட்ச ரூபாய் செலவு ஆகியிருக்கும். அதனால்தான் அந்த விலை. அதே டிவிடியை லட்சக் கணக்கான பேர் வாங்கினால் 50 ரூபாய்க்குக் கிடைக்கும். ஆனால் ஒட்டிஞ்ஜரைத் தெரிந்த ஆட்கள் உலகிலேயே ஆயிரம் பேர் தானே இருப்பார்கள்? மறுபடியும் சாரு நிவேதிதாவின் கதைதான். எக்ஸைல் 30,000 பிரதிகள் விற்றிருந்தால் இந்தக் கண்றாவிக் கட்டுரையை எழுதி இருக்க மாட்டேன்.

(இன்னும் வரும்…)

avatar

இப்படி ஒரு கட்டுரை எழுதப் போகிறேன் என்று சொல்லி, இந்த விஷயத்தைப் பற்றி என் தோழியிடம் பேசிக் கொண்டிருந்தேன். பேருந்து இருக்கைகளில் பிச்சை கேட்டு அட்டை வைக்கும் சிறுமியுடன் தான் உங்களை ஒப்பிடுவார்கள் என்றார் தோழி. நீண்ட நேரம் அவர் சொன்னதன் சுருக்கம் இது: ”நம்முடைய இனத்தின் அடையாளமே அதுதான். ஞானிக்கும் பிச்சைக்காரனுக்கும் வித்தியாசம் தெரியாத இனம் தமிழ் இனம். இல்லாவிட்டால் கடந்த 2000 ஆண்டுகளாக கவிஞர்களை பிச்சைக்காரர்களாகவே வைத்திருப்பார்களா? அந்தக் காலத்துக் கவிஞன் அரசனைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்று வாழ்ந்தான். இந்தக் காலத்து எழுத்தாளன் சினிமாக்காரரை புகழ்ந்து சுகமாக வாழ்கிறான். நீங்கள் இதைச் செய்யாததால் கஷ்டப்படுகிறீர்கள்?”

மலையாளத்தில் எழுதினாலும் எனக்குத் தனிப்பட்ட முறையில் பயன் இல்லை. தமிழ்நாட்டில் கமல்ஹாஸனுக்கும் மணி ரத்னத்துக்கும் எவ்வளவு மரியாதை இருக்கிறதோ அவ்வளவு மரியாதை கேரளத்தில் எனக்குக் கிடைக்கிறது. நான் அழைக்கப்படும் நிகழ்ச்சிகளில் chief guest அடியேன் தான். சமீபத்தில் முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து கேரளத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் அப்படியே. தமிழ்நாட்டுக்கு சார்பாகவே பேசினேன். கை தட்டி வரவேற்றார்கள். ஆனால் வேறு ஒரு தமிழர் தமிழ் நாட்டின் சார்பாகப் பேசியதும் ஒரே கலாட்டா, அடிதடி. பெரும் போலீஸ் பட்டாளம் வந்து விட்டது என்று கேள்விப்பட்டேன். என் நிகழ்ச்சிகளில் நான் பேசியதும் ஒரு பத்து நிமிடம் இருந்து விட்டுக் கிளம்பி விடுவேன்.

சரி, வெறும் மரியாதையை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி போஜனம் பண்ணுவது? ஒரு விஷயம். இங்கே ஒரு கட்டுரைக்கு, கதைக்கு 1000 ரூ. என்றால் அங்கே ரூ.750/- தான் தருகிறார்கள். மாத்ரு பூமியில் மட்டும் 2500 ரூ. ஆனால் மாத்ரு பூமியில் ஏதோ காரணத்தால் என்னை ப்ளாக்லிஸ்ட் செய்து வைத்திருக்கிறார்கள். என்னைத் திட்டி எழுதினால் ஆர்வத்துடன் பிரசுரிக்கிறார்கள்.

தமிழ் எழுத்தாளர்களின் 2000 ஆண்டு வரலாற்றை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்த தோழி என் மொழிபெயர்ப்பாளரும் கூட என்பதால் அவரையும் கருத்தில் கொண்டு இதை எழுதுகிறேன். என் நூல்கள் ஆங்கிலத்தில் வெளியானால் என் நிலைமையில் மாற்றம் வரலாம் என்று தோன்றுகிறது. சமீபத்தில் Jeet Thayil எழுதிய Narcopolis நாவல் மேன் புக்கரின் லாங் லிஸ்டில் இடம் பெற்றிருக்கிறது. ஏஷியன் புக்கர், டிஎஸ்சி போன்ற ஏதாவது பரிசுகளில் என் நாவல் இடம் பெற முடியும் என்பது என் நம்பிக்கை. ஏனென்றால் எனக்கு மிக நன்றாகத் தெரிகிறது; ஏஷியன் புக்கர் பரிசு பெற்று 2 கோடி பிரதிகள் விற்றிருக்கும் Wolf Totem நாவலை விட ராஸ லீலாவும், எக்ஸைலும் நல்ல நாவல்கள்; சுவாரசியமான நாவல்கள். அதனால் என் மொழிபெயர்ப்பாளர்களிடம் மீண்டும் சொல்லிக் கொள்கிறேன். எனக்கு மீன் வேண்டாம்; மீன் பிடிக்கும் வலையைக் கொடுங்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என் பப்ளிஷரின் கவனமின்மையால் அது கை நழுவிப் போய் விட்டது. ஸீரோ டிகிரி ஆங்கிலப் பதிப்பு வெளிவந்த கையோடு ஏஷியன் மேன் புக்கருக்கு அனுப்பப் பட்டிருந்தால் அது குறைந்த பட்சம் ஷார்ட் லிஸ்டிலாவது இடம் பெற்றிருக்கும்.

என் மொழிபெயர்ப்பாளர்கள் முடிந்த மட்டிலும் விரைவாகச் செயல்படும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Wolf Totem நாவலைக் கடுமையாக விமர்சித்து என் தோழியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். நேற்று பார்த்தால் நான் என்னென்ன சொன்னேனோ அதையேதான் பங்கஜ் மிஷ்ரா நான்கு ஆண்டுகளுக்கு முன்பு – வுல்ஃப் டோட்டம் வந்த புதிதில் – ந்யூயார்க் டைம்ஸில் எழுதியிருக்கிறார். இப்போது படு மும்முரமாக அமெரிக்க ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு என் கதைகளையும் கட்டுரைகளையும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன். அந்தப் பத்திரிகைகளின் சந்தாவையும் – டாலரில் இருப்பதால் இந்திய ரூபாய்க்கு மூவாயிரம் நாலாயிரம் என்று ஆகிறது – என் வாசகர்கள்தான் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

என்னிடம் ரூ.25 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் உள்ளன. எல்லாமே கடந்த 20 ஆண்டுகளாக என் நண்பர்கள் வாங்கிக் கொடுத்தது. இதையெல்லாம் விற்று விட்டால் எனக்குக் கொடுக்கப்பட்ட மீதி கொஞ்ச காலத்தை இப்படி காசு காசு என்று அல்லாடாமல் நிம்மதியாக வாழலாம் என்றால் இதையெல்லாம் பழைய பேப்பர்காரன் கூட வாங்க மாட்டான். ஏற்கனவே எழுதி விட்டேன். பிச்சைக்காரகளின் தேசத்தில் பொற்கொல்லனுக்கு ஏது மதிப்பு?

சரி, புலம்பலை இதோடு முடிக்கிறேன். ...ம்மா, ...த்தா என்று வசை கடிதங்கள் எழுதுபவர்கள் பின் கண்டுள்ள இ மெயில் முகவரிக்கு அனுப்பலாம்: charu.nivedita.india@gmail.com

பணம் அனுப்ப விரும்புகின்றவர்கள் என் ஐசிஐசிஐ கணக்குக்கு அனுப்பலாம்:

ICICI Account No. 602601 505045

Name : K. ARIVAZHAGAN

T. NAGAR BRANCH

CHENNAI.

IFSC CODE: ICIC0006026

Axis வங்கியிலும் கணக்கு உள்ளது. தேவையெனில் அனுப்புகிறேன்.

(இன்னும் வரும்…)

RECOMMENDED CONTENTS

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES