கட்சி ஆரம்பிக்க ரூ.30 கோடி கேட்ட ஒரே தலைவர் நம்ம கமல்தான்... அமைச்சர் ஜெயக்குமார் அட்டாக்!

avatar

சென்னை: உலகத்திலேயே கட்சி ஆரம்பிக்க தொண்டர்களிடமே பணம் கேட்ட தலைவர் கமல்ஹாசன்தான் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக ஆட்சியாளர்களை விமர்சிக்க கமல் ஆரம்பித்த நேரத்திலிருந்தே அவரை ஆட்சியாளர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இதில் கமலை கடுமையாக விமர்சித்தவர் அமைச்சர் ஜெயக்குமார். அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் பதவி என்பது மூர் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பொம்மை அல்ல. நினைத்தவுடன் வாங்கிக் கொள்வதற்கு என்றும் அத்தைக்கு மீசை முளைக்கட்டும் என்றும் விமர்சித்திருந்தார்.

ஊழல், விவசாயிகள் பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் பிரச்சினை, மீனவர்கள்,நீட் தேர்வு, டெங்கு. மழை வெள்ளம் உள்ளிட்ட பிரச்சினைகளில் கமல் குரல் கொடுத்து வருகிறார். ஆயினும் அதற்கு அமைச்சர்கள் சரியான பதிலடியை கொடுக்காமல்
அரசியலுக்கு வரட்டும் அப்புறம் பதில் அளிக்கிறோம் என்று அவரை சீண்டினர்.

டுவிட்டரில் மட்டும் நடிகர் கமல் அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்ததை அடுத்து அவரை டுவிட்டர் அரசியல்வாதி என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதையடுத்து கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கலக்கப்படும் எண்ணூர் துறைமுக பகுதியை பார்வையிட்டு முதல் முறையாக களத்தில் இறங்கினார். கடந்த சில நாள்களுக்கு முன்பு பேசிய கமல் அரசியல் கட்சி தொடங்குவதற்கு பணம் இல்லை என்று கவலை இல்லை. கட்சி தொடங்க பணம் தேவை என்றால் அதைக் கொடுக்க ரசிகர்கள் தயாராக உள்ளனர். ரசிகர்கள் வழங்கும் பணத்திற்கு கணக்கு வைக்க செயலி பயன்படும் என்றார்.

இந்நிலையில் கமலின் பிறந்த நாளான இன்று மக்கள் பிரச்சினைகளுக்கான செயலியை அறிமுகப்படுத்திய கமல், தான் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்றும் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்றும் தெரிவித்தார். நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவதே எனது கனவு என்றும் தெரிவித்தார்.

சென்னையில் வெள்ளம்பாதித்த மூலக்கொத்தளத்தில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர். அப்போது கமல் குறித்த கேள்விக்கு ஜெயக்குமார் அளித்த பதிலில், முதலில் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் ஜனநாயகத்தில் மக்கள்தான் இறுதி எஜமானர்கள். அன்று எம்ஜிஆர், நேற்று ஜெயலலிதா, இன்று இரட்டை இலை ஆகியவற்றின் பக்கத்தில் மக்கள் உள்ளனர். உலகத்திலேயே கட்சி தொடங்க ரூ.30 கோடியை தொண்டர்களிடம் கேட்ட ஒரே நபர் கமல்தான். அதென்ன கணக்கு ரூ.30 கோடி என்று எனக்கு புரியவில்லை. இதுவரை யாரும் கட்சி தொடங்குவதற்கு தொண்டர்களிடம் பணம் கேட்டதில்லை என்றார் ஜெயக்குமார்

RECOMMENDED CONTENTS

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES