தன்னை நாத்திகன் என்று சொல்வதை மறுக்கிறார் கமல்!

avatar

சென்னை: நாத்திகன் என்று தன்னை அழைப்பதை மறுப்பதாகவும், தான் பகுத்தறியவே விரும்புவதாகவும் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். எந்த மதத்திலும் வன்முறை இருக்கக் கூடாது என்பதே தன்னுடைய கூற்று என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை தியாகராய நகரில் செய்தியார்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விவரங்கள் : கொசஸ்தலை ஆறு விவகாரத்தில் பல ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை தான். ஆனால் தான் சென்று பார்த்த பின்னர் இன்று அனைவரும் திரும்பிப் பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்பது வெற்றியை நோக்கிய ஒரு நகர்வு. அந்தப் பகுதியில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த மணலை அகற்றும் பணி தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி அவ்வளவு தான்.

இந்துத்துவா குறித்து உண்மையைச் சொன்னதற்கு எப்படி அதை எதிர்கொள்ள வேண்டுமோ அப்படி எதிர்கொள்வேன். இந்துக்களை புண்படுத்துவது என்னுடைய நோக்கம் அல்ல. ஒரு தேடலில் வேறு மாற்றுக்கருத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். இந்துத்துவா குறித்து நான் சொன்னதை எல்லா இந்துக்களும் புரிந்து கொண்டு ஆரோக்கியமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்.

வன்முறையில் யாரும் ஈடுபடாதீர்கள் என்பது என்னுடைய கருத்து. வன்முறை எந்த மதத்தில் இருப்பவர்களும் செய்யக் கூடாது. இந்துமதத்தில் வன்முறை இல்லை என்று சொல்லிவிட முடியாது, அதை சுட்டிக்காட்டுவது தவறில்லை. பிராமண சமுதயாத்தை நான் எப்போதும் தேடிப் போனதில்லை, எல்லா சமூகத்திலும் எனக்கு நண்பர்களும், சகோதரர்களும் இருக்கிறார்கள். சொல்லப்போனால் என்னை இந்து விரோதி என்று தான் சித்தரிக்கிறார்கள். நான் பிறந்தது பிராமண குலம் தான் என் குடும்பத்தில் பலரும் அதே மதத்தில் இன்னும் வாழ்கிறார்கள். என்னை திரைப்படத்தில் அறிமுகம் செய்தது கே.பாலச்சந்தர் அதைத் தவிரை நான் பிராமணத்தை எப்போதும் தேடிச் சென்றதில்லை. அதில் இருந்து நான் விலகி வந்திருக்கிறேன்.

என்னுடைய தேடலில் இது எனக்கு கிடைத்தது, என்னை இப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். என்னை நாத்திகன் என்று சொல்வதை நான் மறுக்கிறேன். ஏனெனில் ஆத்திகர்கள் தந்தது எனக்கு நாத்திகன் என்ற பெயர், ஆஸ்தி - நாஸ்தி இரண்டும் சேர்ந்து எனக்கு நாமம் சூட்டுவதை நான் விரும்பவில்லை. நான் பகுத்தறிய விரும்புகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

RECOMMENDED CONTENTS

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES