மோடியின் அரசியல் கணக்கு

avatar

மோடியின் அரசியல் கணக்கு 06-1509963329-modi-meets-karunanidhi3435

சென்னை: அரசியல் வட்டாரத்தில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது பிரதமர் மோடி- கருணாநிதி இடையிலான சந்திப்பு. தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் தீவிர ஓய்வில் இருந்து வருகிறார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பு காரணமாக, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாட்களில் இருந்து எந்தப் பொது நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்வதில்லை. கடந்த சில வாரங்களாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருணாநிதியை சந்தித்துப் பேசி வருகின்றனர்.

இந்தநிலையில் தினத்தந்தி பவளவிழா நிகழ்ச்சிக்காக சென்னை வந்த பிரதமர் நரேந்திரமோடி, கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. இச்சந்திப்பில் நோக்கம் குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க நிர்வாகி ஒருவர், தமிழகத்தைப் பொறுத்தவரையில், தி.மு.க தற்போது வலுவாக இருக்கிறது.

அ.தி.மு.கவின் உள்கட்சிக் குழப்பங்கள் அக்கட்சித் தொண்டர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே தி.மு.கவுடன் கூட்டணி வைப்பதைப் பற்றி விவாதித்தோம். அந்தநேரத்தில் துரைமுருகன் உள்ளிட்டவர்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தாலும், ஆ.ராசாவால் கூட்டணி முயற்சி தடைபட்டது. கொள்கைரீதியாக பா.ஜ.கவுடன் நாம் கூட்டணி வைப்பது சரியல்ல என ஆ.ராசா உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

இதன்பின்னர், மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு, தி.மு.க எம்.பிக்கள் எங்கள் தலைமையோடு நல்ல நட்பில் இருந்து வருகின்றனர். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் கனிமொழியை பலமுறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. இந்த சந்திப்பின்போதெல்லாம், அப்பாவின் உடல்நிலை எப்படி இருக்கிறது? என விசாரிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் மோடி.

கருணாநிதியின் சட்டசபை வைரவிழாவையொட்டி காங்கிரஸ் மற்றும் இடதுசாரித் தலைவர்களை அழைத்து வந்து கூட்டம் போட்டார் ஸ்டாலின். பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டமாக இருந்தாலும், எங்கள் பக்கம் ஸ்டாலின் வருவார் என நம்புகிறோம். நிதிஷ்குமார், சரத் பவார் வரிசையில் ஸ்டாலின் இடம் பெறுவார் என தேசியத் தலைமை எதிர்பார்க்கிறது. கருணாநிதி குடும்ப உறுப்பினர் மூலமாகத்தான் அனைத்து விஷயங்களும் பேசப்பட்டு வருகின்றன. ஸ்டாலின் மனது மாறுவார் என டெல்லி தலைமை உறுதியாக நம்புகிறது என்றார் விரிவாக.

ஆனால் திமுக நிர்வாகிகளிடம் பேசியபோது, இந்த சந்திப்பில் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை. பிரதமர் சென்னை வந்ததால், கருணாநிதியை சந்திக்க வந்தார். சென்னைப் பயணம் இல்லையென்றால் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்காது. 2ஜி வழக்கோடு இச்சந்திப்பை இணைத்துப் பேசுவது பொருத்தமற்றது என்கின்றனர்.

RECOMMENDED CONTENTS

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES