Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
5/9/2012, 9:22 am
உரையாடல் பகுதி-06

நான்: "வணக்கம் கடவுளே!"

கடவுள்: "ஆமா... உன்னால் வணக்கம் சொல்லாமல் பேச முடியாதோ?"

நான்: "பழகிப்போயிடுச்சு கடவுளே.."

கடவுள்: "மனிதர்களுக்குள் அவ்வாறு சொல்லிக் கொள்வது உங்கள் பண்பைக் காட்டுகிறது. ஆனால், அதே பண்பை என்னிடமும் கடைபிடிப்பது நியாயமா மானிடா? உங்கள் பாணியில் சொல்லப் போனால், எனக்கென்று ஒரு தனித்துவம் இருக்க வேண்டும் அல்லவா? மனிதர்களையும் வணங்குகிறீர்கள்... என்னையும் வணங்குகிறீர்கள்... இது எனக்குப் புரியவில்லை!"

நான்: "உங்களுக்கு இது மட்டும் தான் புரியவில்லை. ஆனால், எனக்கு வாழ்க்கையே புரியவில்லை கடவுளே..."

கடவுள்: "என்னோடு பேசிக்கொண்டிருக்கும் போதும் கூட உனக்கு எதுவும் புரியவில்லையா? சரி, வாழ்க்கையில் உனக்கு என்ன புரியவில்லை? என்னிடம் கேட்க வேண்டியது தானே?"

நான்: "முதல்ல நீங்க என்கிட்ட பேசிக்கிட்டுருக்கறதுதான் எனக்குப் புரியலை!"

கடவுள்: "நான் பேசுவது புரியாமல் தான் இத்தனை நாளும் என்னோடு உரையாடிக் கொண்டிருந்தாயா?"

நான்: "அதில்லை கடவுளே, கடவுள் என்பவர் மகத்தான சக்தி உள்ளவர் என்றும், அவர் என்னோடு பேசுவது நம்பமுடியாமல் இருக்கிறதாகவும், நாம் உரையாடுவது கடவுளுக்கும் மனிதனுக்குமான உரையாடல் போல இல்லை என்றும் பலபேர் கூறுகிறார்கள்."

கடவுள்: "என்னது? நமது உரையாடல் கடவுளுக்கும் மனிதனுக்குமான உரையாடல் போன்று இல்லையா? யார் சொன்னது அப்படி...? இதுவரை நான் யாருடன் பேசி இருக்கின்றேன்? நான் எப்படிப் பேசுவேன் என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும்?..."

நான்: "நீங்க நல்லாத்தான் கேக்குறீங்க... அனால், பல கோடி மனிதர்கள் இந்த பூமியில் இருக்கும் போது நீங்கள் என்னைத்தேடி வந்து பேசுவதன் காரணம் என்ன? என்று எனக்கே கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருக்கின்றது..."

கடவுள்: "ஹ!... ஹா!... ஹ!... ஹா!..."

நான்: "ஏன் இந்த சிரிப்பு? இப்படியெல்லாம் சிரிக்காதீர்கள்... நீங்களும் என்னை கேலி செய்வது போல் இருக்கிறது."

கடவுள்: "இல்லை மானிடா. நான் அதற்காக சிரிக்கவில்லை. நான் உன்னோடு பேசிக் கொண்டிருப்பதற்கு சரியான காரணம் ஒன்று இருக்கிறது மானிடா!"

நான்: "அது என்ன காரணம்?"

கடவுள்: "கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டுமா?"

நான்: "ஆம்! சொல்லித்தான் ஆகவேண்டும். அதற்காகத்தானே உங்களிடம் வந்துள்ளேன்!"

கடவுள்: சரி கடைசியாக சொல்கிறேன்... உன்னிடம் வேறு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?"

நான்: "நிறைய இருக்கிறது...."

கடவுள்: "அதிலிருந்து ஒரு சிறந்த கேள்வியை உடனே கேள் பார்க்கலாம்!"

நான்: "மரணம் என்பது என்ன?"

கடவுள்: "இந்த மிகச்சிறிய நேரத்தில் எவ்வளவு பெரிய சந்தேகத்தை உன்னால் உடனடியாக கேட்க முடிகிறது என்று பார்த்தாயா? இப்படிப்பட்ட உன்னுடன் நான் உரையாடுவது நியாயம் தானே?"

நான்: "மரணம்-னா இதுதான் அர்த்தமா?... இந்தக் கேள்விதான் எல்லோரும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்களே...?"

கடவுள்: "ஆம்! இந்தக் கேள்வி எல்லோரும் கேட்பது தான். ஆனால் அவர்கள் எல்லோரும் அதற்கான பதிலை தேட முயற்சிக்க வில்லை என்பதையும் நீ உணரவேண்டும். கேள்வி கேட்பது ஒன்றும் பெரிய விசயமல்ல மானிடா... ஆனால், அதற்கான பதிலையும் தேடுவது தான் அறிவு! இதில் நீ ஒன்றை நன்றாகக் கவனிக்க வேண்டும்... அதாவது இது போன்ற மற்றவர்களின் உரையாடல்களில் எல்லாம் கேள்வி என்பது சொத்தையாக இருக்கும். அதற்கான பதில் மட்டுமே அவர்கள் சொல்ல நினைத்ததாக இருக்கும்.(அந்தப் பதிலும் கூட சில நேரங்களில் சொத்தையாகத்தான் இருக்கும்) ஆனால், உனது உரையாடலில் பதிலை விட கேள்விகள் தான் கடினமாக இருந்திருக்கின்றது... அந்தக் கேள்விக்கான பதிலை நீ தேடும் விதமும் புதுமையாகவே இருக்கிறது... மொத்தத்தில் உனது கேள்விகள் மற்றவரை சிந்திக்க வைக்கின்றன என்றால் அது மிகையாகாது.

நான்: "மரணம்-னா என்ன-னுதான் நான் உங்ககிட்ட கேட்டேன். அதை சொல்லாமல் நீங்கள் ஐஸ் வைப்பது எனக்கு நன்றாகப் புரிகிறது கடவுளே... ஆனால் மனிதர்கள் இந்த மரணத்தைக் கண்டு எந்த அளவிற்குப் பயப்படுகின்றார்கள் தெரியுமா?"

கடவுள்: "இல்லை மானிடா! மனிதன் மரணத்தைக் கண்டு பயப்படவில்லை. நான் தான் அவர்களுக்கு மரணத்தின் மீது ஒரு பயத்தை உண்டாக்கி வைத்திருக்கின்றேன்."

நான்: "ஏன் இந்த வில்லத்தனம்?"

கடவுள்: "ஏனென்றால்? மனிதனுக்கு மரணத்தின் மீது பயம் இல்லாமல் போய்விட்டால் எவனும் வாழ மாட்டான் மானிடா!"

நான்: "என்ன கடவுளே புதுசா ஏதோ சொல்றீங்க? மரணத்தின் மீது பயம் போய்விட்டால் மனிதன் நிம்மதியாக வாழ்வானே...?"

கடவுள்: இல்லை மானிடா... பயம் மட்டும் போகாது. வாழ்க்கையும் போய்விடும்!"

நான்: "அதைத்தானே எப்படின்னு கேக்குறேன்... இப்போதும் கூட யாரும் வாழவில்லையே... எதையோ தேடிக்கொண்டுதானே இருக்கின்றார்கள்..."

கடவுள்: "ஆம்! அவர்கள் தேடுவது, இந்த மரணத்திற்குள் தான் இருக்கின்றது!"

நான்: "என்ன கடவுளே இப்படி குழப்புறீங்க? நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை... மனிதனின் தேடலுக்கு மரணத்திற்குள் விடை இருப்பதாக கூறுகிறீர்கள். ஆனால், மரணத்தின் மீது அவனுக்கு பயத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறுகிறீர்கள்... இதில் என்ன அர்த்தம் இருக்கிறது? பயத்தை போக்கி இதுதாண்டா வாழ்க்கை அப்படின்னு சொல்லிட வேண்டியது தானே? அதை விட்டுட்டு இந்த விளையாட்டு எதற்காக? எனக்குப் புரியும் வகையில் தெளிவுபடுத்த முடியுமா?"

கடவுள்: "அதை சொல்லிவிட்டால் நீ கடவுளாகி விடுவாய்!... இது தேவ ரகசியம்!"

நான்: "இது ஒன்றும் தேவ ரகசியம் இல்லை. என்னைப் பொறுத்தவரையில் இது தேவையில்லாத ரகசியம்!

கடவுள்: "வேண்டாம் மானிடா!.. எச்சரிக்கின்றேன்!... பலருக்கு அது ஆபத்தாக முடியும்!"

நான்: "எதற்காக இப்போது நீங்கள் என்னை எச்சரிக்கிரீர்கள்? உங்கள் எச்சரிப்பில் அர்த்தமே இல்லை! காரணம் சொல்லமுடியாமல் எச்சரிப்பது அறியாமை! உங்களுடைய ரகசியம் என்பது மற்றவர்களை நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற ஒரே காரணமாகவே இருக்கின்றதே தவிர, மனித வாழ்க்கைக்கு பயன்படுவதாக இல்லை என்பது தான் உண்மை!"

கடவுள்: "நான் உனது நன்மைக்காகவும், மனிதர்கள் ஒவ்வொரு பிறவியையும் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவும் தான், மரணத்தின் மீது ஒரு பயத்தை உண்டாக்கியிருக்கின்றேன்..."

நான்: "ஒவ்வொரு பிறவியும் என்றால்?.... மனிதனுக்கு பல பிறவிகள் இருக்கின்றதா?... அப்போ முன் ஜென்மம், மறு ஜென்மம் என்பதெல்லாம் உண்மைதானா?"

கடவுள்: "ஆம்! உண்மைதான். நெருப்பில்லாமல் புகையாதல்லவா? மனிதனுக்கு பல பிறப்புக்கள் இருப்பது உண்மைதான். ஆனால், அவன் மீண்டும் மனிதனாகவே பிறப்பான் என்பது மட்டும் உண்மையல்ல! ஏனென்றால் ஒன்றையே திரும்ப திரும்ப செய்து கொண்டிருந்தால் நான் கடவுளாக இருக்க முடியாது! ஒவ்வொரு பிறவியையும் ஒவ்வொரு வகையில் வேறுபடுத்தி படைத்திருக்கின்றேன்..."

நான்: "பேசும் போது நல்லா இலக்கணத்தோட பேசுற மாதரிதான் தெரியுது. ஆனா, காரணம் கேட்டா மட்டும் சொல்ல மாட்டேங்கறீங்களே கடவுளே...?"

கடவுள்: "நான் உங்களுக்கான ஒவ்வொரு பிறப்பிலேயும் பல அற்புதமான ரகசியங்களையும் படைத்திருக்கின்றேன். அதனால தான் சொல்லுகின்றேன், எனது படைப்பின் ரகசியத்தை அறிந்து கொண்டால் நீ வாழ முடியாது! மாறாக இறந்து கொண்டே இருக்க வேண்டியது தான். அதை அனுபவிக்க வேண்டுமானால் நீ வாழத்தொடங்கு! இல்லையென்றால் இறந்து கொண்டே இருப்பாய்!..."

நான்: "எங்களைப் படைத்த உங்களையே நாங்கள் இன்று கண்டுபிடித்து விட்டோம். எங்களுக்கு மரணத்தைக் கண்டுபிடிப்பதா சிரமம்?. காலப் போக்கில் இந்த உலகத்தையே எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவோம். மழையைப் பெய்யச்சொன்னால் பெய்யும்! காற்றை நிற்கச் சொன்னால் நிற்கும்! அறிவியல் வளர்ச்சியைப் பற்றி உங்களுக்கு இன்னும் தெரியவில்லை என்றே நினைக்கிறேன். எனவே மரணத்தைப் பற்றி நீங்களே சொல்லிவிடுவது தான் உங்களுக்கு சிறப்பு!"

கடவுள்: "எது?... என்னைக் கண்டுபிடித்து விட்டீர்களா? எப்போது?... எப்படி கண்டுபிடித்தீர்கள்?... எங்கே, நான் எப்படி இருப்பேன் என்று கூறு பார்க்கலாம்!!! அடேய் மானிடா!... அதற்காகத்தான் "கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்" என்று மனிதனையே சொல்ல வைத்தேன். ஏனென்றால் கடவுளைக் கற்பித்தவர்களுக்கு அந்தக் கடவுளை மனிதனில் இருந்து வேறுபடுத்திக் காட்டத் தெரியவில்லை! கடவுள் தண்டிப்பார், குத்துவார், கிள்ளுவார், என்றெல்லாம் ஒண்ணாங்கிளாஸ் மாணவனைப்போலவே புலம்புகின்றனர்... சரி, வடிவம் கொடுத்தார்களே அதையாவது ஒழுங்காகச் செய்தார்களா என்றால்? அதுவும் மனிதனை போலவே... ஏனென்றால் மனிதனுக்கு கடவுளைத் தெரியாது என்பது தான் உண்மை! எனவே தான் அவனது கற்பனை என்பது அவன் பார்த்தவற்றை பின்னணியாக வைத்தே அமைந்திருக்கின்றது... அதிகப் பட்சம் பத்து தலைகளும், பல கைகளும் இருப்பதாக சொன்னதே அவனது வேறுபாடு. அதிலும் கூட தலையும் கையும் தான் வருகிறது என்பதை நீ உணர வேண்டும்.

ஆனால், எனது படைப்பில் இதுபோல எதையாவது ஒன்று போல பார்த்திருக்கின்றாயா? மனிதன் என்றால் இப்படித்தான் இருப்பான்! விலங்குகள் என்றால் இப்படித்தான் இருக்கும்! பறவை, மண், மரம், செடி, கொடி என்று ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வகையில் படைத்திருக்கின்றேன்... அந்த ஒவ்வொன்றுக்குள்ளேயும் கூட பல வேறுபாடுகளையும் புகுத்தியிருக்கின்றேன்! அப்படிப்பட்ட என்னால், 'என்னை எப்படி அடையாளப் படுத்திக் கொள்ளவேண்டும்' என்று எனக்குத் தெரியாதா? நான் உங்களிடம் வந்துதான் மேக்கப், காஸ்டியூம் எல்லாம் போட்டுக் கொள்ளவேண்டுமா? எனவே நீங்கள் வாழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், என்னையும் எனது படைப்பின் ரகசியத்தையும் அறிந்து கொள்ளாமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது!"

நான்: "நன்றாக சொன்னீர்கள் கடவுளே! நன்றி.! ஆனால், அந்த மரணத்தைப் பற்றி மட்டும் சொல்லிவிடுங்களேன்..."

கடவுள்: "ஏண்டா... நீ திருந்தவே மாட்டாயா? எதை செய்யாதே என்று சொல்கிறேனோ அதையே மறுபடியும் கேட்கின்றாய்?

நான்: "என்ன பண்ணுறது? எல்லாம் உங்கள் படைப்பின் வேறுபாடுதான். நீங்கள் தானே என்னை மட்டும் இப்படி வேறுபடுத்தி படைத்து விட்டீர்கள். அதாவது கட்டுப்பாடுகளை உடைப்பவனாக...!"

கடவுள்: "இப்படி எதையாவது சொல்லி என்னை பேசவிடாமல் செய்து விடு."

நான்: "சரி கடவுளே, நீங்கள் மரணத்தைப் பற்றி சொல்ல வேண்டாம். ஆனால் ஏன் மரணத்தின் மீது மனிதனுக்கு பயத்தை ஏற்படுத்தினீர்கள்?.. அதை மட்டும் சொல்லலாம் அல்லவா?..."

கடவுள்: "அந்தப் பயம் தானடா எல்லா ரகசியத்தையும் மறைத்து வைத்திருக்கிறது... அதை எப்படி போட்டு உடைப்பது?"

நான்: வேறு வழியே இல்லை கடவுளே... நீங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும்! இல்லையென்றால் எதற்காக என்னிடம் உரையாட வந்தீர்கள்...? எதற்காக சந்தேகங்களை கேட்க சொன்னீர்கள்?..."

கடவுள்: "அப்படியா?... சரி சொல்கிறேன். அனால், குறுக்கே பேசாமல் கேட்டுக்கொண்டிரு. அதாவது, மரணம் என்பது மனிதர்கள் பயப்படவேண்டிய ஒரு நிகழ்வல்ல. மனிதனுக்கான புதுப்பித்தல் தான் இந்த மரணம்! ஆம்! மரணத்திற்குப் பின்னால் உனக்காக ஒரு அற்புதமான வாழ்க்கைத் தடம் காத்திருக்கின்றது!"

".................................."

"நீ உறங்கும் போது உனக்கு கனவு வருகின்றதல்லவா? அது தான் உனது அடுத்தக் கட்ட வாழ்க்கைக்கான முன்னோட்டம்...! அந்தக் கனவில் உன்னால் வண்ணங்களைக் காண முடிந்திருக்கின்றதா? முடியாது! காரணம்... அடுத்தப் பிறப்பில் உனக்கு ரத்தம் கிடையாது! ஏனென்றால் மனிதன் முதன் முதலில் தொட்டு உணர்ந்த நிறம் இந்த சிவப்புதான்!.. இந்த ரத்தம் தான்!...

"..............................."

"அதனால் தான் இந்தப் பிறவியில் நீ கொண்டிருந்த ரத்தக்கறை படிந்த உடலை இங்கேயே விட்டுச் செல்கின்றாய் என்பதை இப்போது உணர்ந்து கொள்வாய் என்று நினைக்கின்றேன். ரத்தம் இல்லையென்றால்...? அடுத்த பிறப்பில் உனக்கு உறவுகளும் இல்லை. உறவுகளால் வரும் துன்பமும் இல்லை. உறவுகள் இருந்தால் தானே துன்பமும், துயரமும் அதிகம் இருக்கும்?"

".............................."

"இந்தப் பிறவியில் நீ எப்படி இன்பங்களை தேடி அலைகின்றாயோ அதைப் போலவே அங்கு நீ துன்பங்களை தேடினாலும் உனக்குக் கிடைக்காது! அது ஒரு அற்புதமான உலகம்!"

"......................."

"அங்கே உன்னால் எதையுமே உருவாக்க முடியாது! அனுபவிக்க மட்டுமே முடியும்! ஏனென்றால் உன்னால் உருவாக்கப்படும் எதுவுமே உனக்கு துன்பத்தைத்தான் தரும்! உன்னை ஆட்டிப் படைக்கவே செய்யும்! உனது வாழ்வை சிதைக்கவே செய்யும்! எனவே நீ செய்யும் தவறுகளுக்கெல்லாம் நான் பழியாகிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காகவே அங்கு நீ எதையும் உருவாக்குவதை நான் அனுமதிக்கவில்லை!"

"............................."

"உதாரணமாக மனிதன் பணத்தை உருவாக்கினான். ஆனால், அது தான் இன்று மனிதனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது!... இது போல் மனிதனுக்காக மனிதனால் உருவாக்கப் பட்ட எல்லாமே அவனைத்தான் ஆட்சி செய்கின்றதே தவிர அவனுக்காக செயல்படுவதில்லை. உங்கள் அரசியலைப் போல!"

"................................."

"மனிதனை மனிதனே ஆட்சி செய்கின்றான் என்றால்? மற்றவற்றை நான் சொல்லியா தெரிந்து கொள்ளவேண்டும். அதனால் தான் மரணத்திற்கு அடுத்த வாழ்வில் உனக்கு இன்பங்களை மட்டுமே படைத்திருக்கின்றேன். எனவே இந்த மரணத்தைக் கண்டு நீங்கள் பயம் கொள்ளத்தேவை இல்லை! மரண பயம் என்பது உனது அழகிய வாழ்வுக்கான பாதுகாப்பு.! அதனால் மரணத்தைக் கண்டு அஞ்சாதே. அதை சந்திக்கத் தயாராக இரு! அந்த மரணத்தால் தான் நீ புதுப்பிக்கப் படுகிறாய்!..."

"..............................."

"என்ன மானிடா? புரிந்ததா? மரணத்தைக் கண்டு நீ இனிமேல் பயம் கொள்வாயா?"

நான்: "அட என்ன கடவுளே நீங்க...? நான்தான் ஏதோ தெரியாத்தனமா கேட்டுட்டேன்.... அதுக்காக இவ்வளவு பெரிய ரகசியத்தை நீங்களும் இப்படி பப்ளிக்காக சொல்லலாமா? உங்களை எல்லாம் கடவுள் என்று எப்படி ஏற்றுக் கொள்வது?"

கடவுள்: "என்னடா உளறுகிறாய்! நீ தானே என்னை சொல்லச் சொல்லி வற்புறுத்தி கேட்டாய்! இப்போது என்னையே கடவுளா என்று அலட்சியப் படுத்துகிறாய்? மனிதனிடம் கடவுள் பேசக்கூடாது என்பதை உறுதி செய்துவிட்டாயே... அறிவு இருக்கா உனக்கு?... உன்னை..."

நான்: "கொன்று விடுங்கள் கடவுளே.... என்னைக் கொன்று விடுங்கள்! அதற்காகத்தானே உங்களை அவமரியாதையாகப் பேசுகிறேன்... இப்போதே என்னைக் கொன்றுவிடுங்கள்! எனக்கு இந்த சூழ்ச்சி நிறைந்த உலகத்தில் வாழ விருப்பம் இல்லை. அந்த மரணத்திற்குப் பின்னால் இருக்கும் அழகிய உலகம்தான் எனக்கு வேண்டும். எனவே என்னைக் கொன்று விடுங்கள்!"

கடவுள்: "என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, என்னையே ஒரு நிமிடம் பதரச்செய்து விட்டாயே... நான் உன்னுடன் பேச வந்ததன் காரணம் புரிந்ததா? உனது புத்திசாலித்தனத்தை நினைத்து நான் பெருமையடைகின்றேன்!"

நான்: "ஹலோ!... ரொம்பப் பெருமை பட்டுக்கொள்ளாதீர்கள். நான் உங்களை கலாய்த்துக் கொண்டிருக்கின்றேன்.! அது புரியாமல் பெருமைப் படுராராமே...?"

கடவுள்: "என்னடா மீண்டும் உளறுகிறாய்?!..."

நான்: "பின்னே என்ன கடவுளே! இவ்வளவு பெரிய ரகசியத்தை இப்படி பப்ளிக்கா சொல்லிடீங்களே... இனிமே எல்லாரும் "செத்து செத்து விளையாடப் போறாங்களே..." அதுக்கு என்ன பண்ணப் போறீங்க?..."

கடவுள்: "காமெடி செய்தாலும் கொஞ்சம் சிந்திக்கிற மாதரி தான் செய்கிறாய். அதனால் நான் உன்மீது கோபப்படப் போவதில்லை! மனிதர்கள் எல்லாம் செத்து செத்து விளையாடுவார்களே அதற்கு என்ன செய்வது என்று தானே கேட்டாய்?... அதாவது, மனிதனுக்கு ஒரு சிறப்பு குணம் இருக்கின்றது மானிடா! என்னவென்றால்? தான் இதுவரை சந்திக்காத, கேள்விப்படாத புதிய விசயங்களை அவ்வளவு எளிதில் அவன் ஏற்றுக் கொள்வதே இல்லை! அப்படி ஏற்றுக் கொண்டுவிட்டால் அதனுள்ளேயே மூழ்கிப்போய் விடுவான்! உதாரணமாக, மனிதன் கால்நடைப் பயணம் மேற்கொண்டிருந்த போது, புதிதாக பேருந்து கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால், தனது சிந்தனை மூலம், "நடக்காமல் பயணமா? இது நம்ப முடியாது. இதனால் ஆபத்து வரலாம்" என்று கருதி அன்று அதில் ஏறிப் பயணம் செய்யவில்லை. ஆனால் இன்று எவ்வளவு ஆபத்து நேர்ந்தாலும், பேருந்தின் கூரைமீது கூட அமர்ந்து செல்லத்தயாராக இருக்கின்றான்!

கடல் வழியாகப் பயணம் மேற்கொண்டிருந்த சமயத்தில், ஆகாய விமானம் கண்டு பிடிக்கப்பட்டது. அப்போதும் இதே நிலைதான். ஆனால் இன்று?...

அவ்வளவு ஏன், உனது பாணியிலேயே சொல்கிறேனே... அதாவது AR.ரகுமான் முதன் முதலில் ஒரு மாறுபட்ட இசையை சினிமாவில் புகுத்திய போது, ஒட்டு மொத்த திரை உலகமும் அந்த இசையை "காட்டுமிராண்டித்தனம்" என்று விமர்சனம் செய்தது. ஆனால் அந்த இசைதான் இன்று? "ஆஸ்கர்" பெற்று உலகளவில் பேசப்படுகிறது! காரணம் முதலில் ஏற்றுக் கொள்ளாத மனிதன் இப்போது அந்த இசையில் மூழ்கி இருக்கின்றான்!

அதே போல உன் மூலம் நான் இன்று சொன்னதை, உடனே யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால், அப்படி ஏற்றுக்கொள்ளும் நிலை வரும் போது... நீ சொன்னது போல எல்லோரும் செத்து செத்து விளையாடுவார்கள்! அதுதான் இந்த உலகம் அழிவதற்கான நேரம்! அதுவரை இந்த உலகத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது! அப்படியானால், இந்த உலகம் எப்போது அழியும்?..."

நான்: "இது தெரியாதா? மனிதர்கள் எல்லாரும் செத்து செத்து விளையாடும் போது அழியும்!"

கடவுள்: "சரிதான், ஆனால்... எனது கருத்தை நீ இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை மானிடா!... அதாவது, மனித சமுதாயம்... இருக்கும் வாழ்வைத் தொலைத்துவிட்டு, எப்போது இன்னொரு வாழ்க்கைக்கு ஆசைப்படுகின்றதோ அப்போதுதான் இந்த உலகம் அழியும்!! இப்போது புரிந்ததா நான் ஏன் மரணத்தின் மீது பயத்தை ஏற்படுத்தி வைத்திருந்தேன் என்று? இதுபோல என்னையும், எனது ரகசியங்களையும் நீங்கள் அறிந்து கொள்ளும் போதும் உங்களுக்கு ஆபத்தே விளையும்! இதுதான் நான் மறைந்திருப்பதன் வரலாறு!

நான்: "வரலாறுன்னா, STD தானே?... நீங்கள் மறைந்திருக்கவில்லை. தலைமறைவாக இருக்கின்றீர்கள்! இவ்வளவு வேடிக்கைகளை நேரில் வந்து காட்டிக்கொண்டிருந்தால் நாங்கள் உங்களை சும்மாவா விட்டு வைப்போம்? சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி! அதுமாதறி.... எல்லாத்துக்கும் நீங்க தான் கடவுளே காரணம்!"

கடவுள்: "ஆம்! அப்படியே வைத்துக்கொள்."

நான்: "சரி கடவுளே... மனிதனுக்கு மரணத்தின் மீதான பயம் நீங்கி... உலகம் அழிஞ்சா எனக்கென்னடா.. நான் செத்ததுக்கு அப்புறம் தான் எனக்கு இன்னொரு அழகிய வாழ்க்கை இருக்கின்றதே" அப்படின்னு நினைச்சி.... என்னை மாதரி சிலர் இன்னிக்கே செத்துப் போயிட்டாங்கன்னா?..."

கடவுள்: "அதுக்காகத்தாண்ட இவ்வளவு காலமாக மரணத்தின் மீது பயத்தை ஏற்படுத்தி வைத்திருந்தேன்.... இல்லன்னா ஆசைகள் நிரம்பிய மனித சமுதாயம் எப்போதோ அழிந்து போயிருக்கும்! எந்த வாழ்வையும் அனுபவிக்க முடியாமல்."

நான்: "இதுவரைக்கும் சரி, ஆனா இப்பதான் நீங்க சொல்லிட்டீங்களே... இனிமேல அப்படி நடந்தா?... அறிவில் வளர்ச்சியில்லாத... மற்றவர்கள் சொல்வதை அப்படியே நம்பித்திரியும் சிந்தனைத்திறன் இல்லாத யாராவது இன்னைக்கே செத்துப் போயிட்டா?..."

கடவுள்: "உன்னோடு எளிதில் பேசிக் கொண்டிருப்பதால்... நான் கடவுள் என்பதையே சில நேரங்களில் நீ மறந்து விடுகின்றாய். அதாவது ஒரு பாடத்தை முழுமையாக அல்லது சரிவர படிக்காதவர்கள் யாரும் அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியாது மானிடா! மேலும், உன்னால் உருவாக்கப்படும் எதுவுமே உனக்கு ஆபத்தைத்தான் தரும் என்று சொன்னதை மறந்து விட்டாயா?...."

நான்: "அப்படியென்றால்..., வாழ்க்கையை சந்திக்க துணிவில்லாமல்..., சரிவர வாழாமல்... தற்கொலை செய்து கொள்ளும் முட்டாள்களுக்கெல்லாம் அந்த அழகிய உலகத்தில் அனுமதி கிடைக்காது என்று சொல்கிறீர்கள்... அப்படிப்பட்டவர்களுக்கு இதே துன்பங்களும், துயரங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும்!.. சரிதானே கடவுளே?..."

கடவுள்: "ஆம்! இப்போதுதான் நீ "கு யி ல ன்" என்பதை நிரூபித்திருக்கின்றாய்! அதனால்தான் கடவுளான நான் உன்னைத்தேடி உரையாட வந்திருக்கின்றேன்."

நான்: "நல்லவேளை நியாபகப் படுத்தினீர்கள்! ஆமா, என்னோடு நீங்கள் உரையாடுவதன் காரணம் என்னன்னு கொஞ்சம் தெளிவா எனக்குப் புரிகிற மாதரி சொல்ல முடியுமா?

கடவுள்: "ஏன் முடியாது? தாராளமாக சொல்ல முடியும்! தைரியமாகவும் சொல்ல முடியும்!"

நான்: "பில்டப் எல்லாம் வேண்டாம் கடவுளே... முதல்ல காரணம் என்னன்னு சொல்லுங்க?..."

கடவுள்: "கு யி ல ன்' என்றால் தேவேந்திரன் என்றும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதாவது தேவேந்திரன் என்றால் தேவலோகத்து அரசன்!"

நான்: "இது எங்கே சொல்லப் பட்டிருக்கின்றது? ஆதாரம் காட்ட முடியுமா?

கடவுள்: "ஆங்... உங்க வீட்டு மொட்டை மாடியில சொல்லப் பட்டிருக்கிறது... வடாம் காயப் போடப் போகும்போது படிச்சி தெரிஞ்சிக்கோ! ஏம்பா... ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை எங்க தெரிஞ்சுக்கணும்னு கூட உனக்கு தெரியாதா?

நான்: "சரி சரி தெரிஞ்சிக்கறேன்... ஆனா, எப்படியாவது என்னைக் கடவுள்-னு சொல்லி மாட்டி விட்டுடனும்... அதானே கடவுளே உங்க ஆசை...?

கடவுள்: "ஹ... ஹ... ஹா.... உனது "அறிவு விளையாட்டை" விட எனது திருவிளையாடல் ஒன்றும் அவ்வளவும் அர்த்தங்கள் நிறைந்ததில்லை மானிடா..."

தொடரும்...

-அந்தப்பார்வை

Message reputation : 100% (16 votes)
Member•••2
avatar
Selvam
13/9/2012, 10:30 am
கடவுளே நேரில் வந்தால் கூட இவ்வளவு விளக்கங்கள் கொடுப்பாரா என்று தெரியவில்லை. உங்கள் சிந்தனைகள் அனைத்தும் யாராலும் கனவில் கூட காண முடியாதவை என்று சொன்னால் அதுதான் பொருந்தமாக இருக்கும். கடவுளோடு நீங்கள் அடிக்கும் லூட்டி என்னைப் போன்றோரை சிந்திக்க வைக்கிறது...
நல்ல தகவல்களை அறியத்தரும் உங்கள் முயற்ச்சிக்கு நன்றி. நான் இனிமேல் மரணத்தைக் கண்டு பயப்படமாட்டேன்.

Message reputation : 100% (6 votes)
நடத்துனர்•••3
avatar
Sekaran Mathan
13/9/2012, 10:33 am
உயர்ந்த சிந்தனை.!

Message reputation : 100% (2 votes)
நடத்துனர்•••4
avatar
Sekaran Mathan
19/9/2012, 12:35 am
Selvam wrote:கடவுளே நேரில் வந்தால் கூட இவ்வளவு விளக்கங்கள் கொடுப்பாரா என்று தெரியவில்லை. உங்கள் சிந்தனைகள் அனைத்தும் யாராலும் கனவில் கூட காண முடியாதவை என்று சொன்னால் அதுதான் பொருந்தமாக இருக்கும். கடவுளோடு நீங்கள் அடிக்கும் லூட்டி என்னைப் போன்றோரை சிந்திக்க வைக்கிறது...
நல்ல தகவல்களை அறியத்தரும் உங்கள் முயற்ச்சிக்கு நன்றி. நான் இனிமேல் மரணத்தைக் கண்டு பயப்படமாட்டேன்.
பயப்படாமல் இருப்பது சந்தோசம் தான் ஆனால், உடனே செத்துப் போயிடாதீங்க...

Message reputation : 100% (1 vote)
Permit Member•••5
avatar
Kavitha Banu
21/9/2012, 5:59 pm
சூப்பர் சந்திப்பு! பாராட்டுக்கள். உங்களுடைய கட்டுரைகளையும் கதைகளையும் படிக்கப் படிக்க ஆர்வமாக உள்ளது. தயவு செய்து நிறைய எழுதுங்கள் அந்தப்பார்வை. "எழுத்ததிகாரன்" என்பதை உங்கள் எழுத்துக்கள் தான் நிரூபிக்கின்றன. நன்றி.

Message reputation : 100% (2 votes)
Permit Member•••6
avatar
Maxwell2013
9/5/2013, 12:35 pm
அருமையான கட்டுரை. இந்தக் கட்டுரையின் மற்ற பகுதிகளை படிக்க ஆர்வமாக உள்ளது. எனவே மற்ற பகுதிகளையும் படிக்க அனுமதிக்க வேண்டுகிறேன்.

Message reputation : 100% (1 vote)
Permit Member•••7
avatar
Maxwell2013
20/5/2013, 9:27 pm
கடவுள்கிட்ட இப்படி பேசி இதுவரை நான் கேள்விப் பட்டதில்லை. சிந்திக்க வேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது. அருமை.

Message reputation : 100% (7 votes)
•••8
Sponsored content

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

கடவுளும் நானும்! (மரணம் ஏன் பயம் காட்டப்பட்டது?)

From எழுத்ததிகாரன்

Topic ID: 462

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...